Tuesday, 16 July 2013

நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரும் வழக்கு வாபஸ்


நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரும் வழக்கு வாபஸ்
நடிகை அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவை மனுதாரரே வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அதை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில் வளசரவாக்கத்தைச் சேர்ந்த எஸ்.பாரதிதேவி (வயது 42) தாக்கல் செய்த ஆள்கொணர்வு மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அஞ்சலி என்கிற பாலா என்கிற திரிபுரசுந்தரி (வயது 27), எனது சகோதரி பார்வதிதேவியின் மகள். அஞ்சலியை நான் தத்து மகளாக எடுத்துக்கொண்டேன். இதற்கான நடைமுறைகளை கோடம்பாக்கம் சார்-பதிவாளர் அலுவலகத்தில் 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் செய்திருக்கிறேன்.
அஞ்சலி நடிகையாக இருக்கிறாள். சத்தமின்றி முத்தமிடு என்ற படம் அஞ்சலியின் முதல் சினிமாவாகும். இதன்பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் அஞ்சலி நடித்து வந்தார். தற்போது பலுப்பு என்ற தெலுங்கு படத்தில் அவர் நடிக்கிறார். இதற்காக அவர் கடந்த மார்ச் 31-ந்தேதி எனது கணவருடன் ஐதராபாத் சென்றிருந்தார். 

அங்கு தாஸ் பல்லவா என்ற ஓட்டலில் இரண்டு பேரும் அறை எடுத்துத் தங்கி இருந்தனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி காலையில் என் கணவர் கண்விழித்து பார்த்தபோது, அஞ்சலியைக் காணவில்லை. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.

நான் வளசரவாக்கம் போலீஸ் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனரிடமும் ஏப்ரல் 10-ந்தேதி புகார் கொடுத்தேன். இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அஞ்சலியை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் அஞ்சலியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகிறேன். அவர் காணாமல் போய் சில நாட்கள் ஆகிவிட்டதால், உயிருடன் இருப்பாரோ என்ற அச்சம் உள்ளது. எனவே அஞ்சலியை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதிகள் வி.தனபாலன், சி.டி.செல்வம் முன்பு இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அஞ்சலி தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.சண்முகசுந்தரம், வக்கீல் முகுந்தன் ஆஜரானார்கள். அரசுத்தரப்பில் வக்கீல் தம்பிதுரை ஆஜரானார்.

ஏற்கனவே பெங்களூரில் போலீஸ் அதிகாரி முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார். எனவே அவர் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூற முடியாது என்று தம்பிதுரை வாதிட்டார். 

அஞ்சலி தரப்பில் வாதிட்ட மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், "அஞ்சலியை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என்று இங்கு வழங்கு தாக்கல் செய்துவிட்டு, அவரிடம் ஜீவனாம்சம் கேட்டு மற்றொரு மனுவை வேறு கோர்ட்டில் பாரதிதேவி தாக்கல் செய்துள்ளார். இதை ஏற்க முடியாது" என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ஆட்கொணர்வு மனு தவறான மனுவாக இருந்துவிடக்கூடாது என்று கருத்து கூறினர். அதைத் தொடர்ந்து அந்த ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெற்றுக்கொள்வதாக பாரதிதேவி தரப்பில் கூறப்பட்டது. எனவே மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment